கிட்னி புரோக்கர் (சிறுகதை)


வெறகடுப்பில் தீய்ந்து போன சட்டியைப் போல, வெயில் சூட்டில் கருத்துப் போன முகம். மழை   பெய்யாத வன்னிக் காட்டு இலைகளைப் போல், எண்ணெய் தடவாததால், பழுப்பேறிப் போன முடி. கடுமை இருந்தாலும், கள்ளத்தனம் இல்லாத பார்வை. மெலிந்தாலும், பலமுள்ள தேகம். பயாஸுக்கு அடையாளம் சொல்வதென்றால், இப்படித்தான் சொல்ல வேண்டும்.

இந்த பிஸ்னஸ் டீலிங்கில் ஸுபைர் காக்கா முதலில் பயாஸை சந்தித்தது மிகவும் வித்தியாசமான நிகழ்வு. எத்தனையோ பிஸ்னஸ் செய்திருக்கிறார். அவருடைய இருபத்திரண்டு வருட புரோகர் சர்விஸில் அவர் பேசாத கல்யாணமுமில்லை. பார்க்காத பிஸ்னஸும் இல்லை. முச்சந்திக்கு முன்னாலுள்ள மூனேக்கர் காணியை மூனா கானாவுக்கு பேசியதும் அவர்தான். ஆனால், கடைசி மட்டும், கிட்னி பிஸ்னஸ் என்டா அவர் பார்த்ததே இல்லை.


ஸுபைர் காக்கா வழக்கம் போல், பீபல்ஸ் பேங்க முன்னால் வராந்தாவில், அவரது பழைய 'செட்டோடு' வெத்திலயை சப்பிக் கொண்டே ஊர் பலாய் கழுவிக் கொண்டிருந்தார். ஊர் பலாய் கழுவுறதால, கூட்டிக் கழிச்சிப் பாத்தா, லாபம்தான் அதிகம். சின்ன லெப்பட வீட்டுல விக்க ஈக்கிற பழைய கார் எஞ்சின்ல இருந்து, அமீர்சாப்ட மகளுக்கு கல்யாணம் பேசத்தொடங்கியிருக்குறது வரயில, அவர் அறிஞ்சு கொள்ள உதவி செய்ற ஆக முக்கியமான 'இன்ஃபோமேஷன் சோஸ்' ஊர் பலாய் மஜ்லிசுகள்தான்.

இப்படி ஊர் பலாய் கழுவிக் கொண்டு ஈக்கிற டைம்லதான், பயாஸ் வந்து 'லபக்' என்று ஸுபைர் காக்காவின் கைகளைப் பிடித்து 'சின்ன விஷயம் ஒன்டு பேசோனும்' என்றான். பயாஸை அதற்கு முன் ஸுபைர் காக்கா கண்டதில்லை. அவன் நடந்து வந்த விதம், முழித்த முழி, அவன் அவரது கையைப் பிடித்த முறை எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு பெரிய 'டீல்' என்பது ஸுபைர் காக்காவின் புரோக்கர் மூளையில் பளிச் என்று பட்டது.          

'என்ன விஷயம்...?வாங்கோ மகன் பேசுவோம்' என்று சற்று தூரமாக அழைத்துப் போனார் ஸுபைர் காக்கா. 'செட்ல' ஈக்கிற அடுத்தவர்கள், இடைல தலயப் போட்டு காரியத்தக் கெடுத்துடுவானுகளோ என்ட பயம் ஸுபைர் காக்காவுக்கு.

'நானா... என்ட கிட்னியொன்ட விக்கப்பாக்குறேன். யாரு சரி இருந்தா பேசுங்கோ....' பயாஸ் அமைதியாகச் சொன்னான்.

எஞ்சினை விக்கலாம். பழைய காரை விக்கலாம். வீட்டை விக்கலாம். காணியை விக்கலாம். டீவியை விக்கலாம். ரேடியோவை விக்கலாம். புடுவ செட்டை விக்கலாம். பழைய தகரத்தை இரும்புக் கடைக்கு விக்கலாம். சட்டிப் பானைகளை விக்கலாம். நகையை விக்கலாம். ஒருவன் கிட்னியை விக்கலாமா?

தூக்கிவாரிப் போட்டது ஸுபைர் காக்காவுக்கு. தான் காண்பது நிஜமா அல்லது கனவா என்று கூட சந்தேகப்பட்டார். இவன் ஒன்டும் நம்மல தமாசு, கிமாசு பண்ணலயே என்ற விதமாகப் பார்த்தார். பயாஸின் முகத்தில் இருந்த சீரியஸ்னஸை வைத்து, அவன் உண்மையாகத்தான் சொல்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டார்.

ஸுபைர் காக்காவுக்கு ஒரு கணம் தலை சுற்றியது. நஸீம் நானாவின் பழைய எக்ஸிடன்ட் ஆகின காரைப் பேசி விற்றிருக்கிறார். ஷரீபா மச்சியின் மகளுக்கு பிஸ்கட் கம்பனியில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இன்று வரை கிட்னி பிஸ்னஸ் பண்ணியதில்லை.        

அவர் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே 'அஞ்சி லட்சம். ஐம்பத நீங்க எடுத்துக்கோங்க. ஏலும். என்டாப் பேசுங்கோ. பெரித ஒதவியா இருக்கும்...' 'கிட்னிய விக்கிற அளவுக்கு அப்பிடி என்ன வாப்பா பிரச்சின' ஸுபைர் காக்காதான் இப்படிக் கேட்டார். இப்போது அவர் புரோக்கர் நானாவாகக் கேட்கவில்லை. ஐந்து பிள்ளைகளுள்ள ஒரு தகப்பனாக, தந்தைப் பாசத்தோடு கேட்டார்.

'சொந்த வீடில்ல. கூலிக்கு ஈக்குறோம். புள்ளகள் வளருதுகள். என்ன செய்ய?. வருமானம் போதாது.  வெளிநாடு போக ட்ரைப் பண்ணி, அதுவும் சரி வரல்ல. வேற எதுவும் செய்ய வழியில்லாததாலதான் இந்த முடிவுக்கு வந்தேன்....'    

'உடம்புல பலமிருந்தா ஏதாவது செஞ்சி கொள்ள ஏலுமே வாப்பா. முதல்ல எங்கட உடம்பு பலமா இருக்கோனுமே என்ன செய்றதுக்கும்? கிட்னியக் கொடுத்துப் போட்டு பொறகு யோசிச்சு என்ன பிரயோசனம்'

தலையை சொறிந்து கொண்டான் பயாஸ். ஸுபைர் காக்காவின் அறிவுரை அவனை எறிச்சல் படுத்தியது போன்று இருந்தது. 'ஏலும் என்டால் பேசுங்கோ'. ஸுபைர் காக்கா சொன்னது அவனிடம் எடுபடவில்லை. அவன் சொன்ன விதம் 'எல்லாம் யோசிச்சிக் கிழித்த பிறகுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். உங்கள் யோசனை எனக்குத் தேவையில்லை. முடியுமென்றால் பேசுங்கள். இல்லாவிட்டால் ஆளை விடுங்கள். எனக்கு வேறு ஆட்கள் இருக்கிறர்கள்'என்று சொல்வது போல் இருந்தது.

ஸுபைர் காக்கா யோசித்தார். ஸுபைர் காக்காவின் மகளுக்கும் கல்யாணம் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. இருபது பவுன் நகை சீதனமாகத் தர வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார்  அடம் பிடிக்க, ஒருவாராகக் கதைத்து பத்துப் பவுன் என்று ஷேப் பண்ணி வைத்திருந்தார். தங்கத்தின் விலையை விசாரித்தால், ஐம்பத்தாராயிரம். ஆக நகைக்கே கிட்டத்தட்ட ஐந்தரை லட்சம் தேவைப்படும்.

இது சம்பந்தமாகத்தான் இன்று காலையும் மனைவியோடு கடும் வாய்த்தக்கம் ஏற்பட்டது. 'கல்யாணம் முடிச்ச நாள்ல இருந்து என்னத்தயாலும் உருப்படியா செஞ்சி ஈக்கிறளா?' மனைவி கேட்டாள். பாவம் மகளின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை அவளுக்கு.

இந்த வாய்த்தக்கத்தின் வடு மனசில் பாரமாக இருக்கும் போதுதான் அவர் டவுனுக்கு வந்திருந்தார். பயாஸின் வடிவத்தில் இந்த கிட்னி வியாபாரம் வந்த போது பேசாமல் டீலிங்கை செய்து கொடுத்துவிடுவோமா என்று கூட நினைத்தார்.

கிட்னியை விற்றுக் கொடுப்பது ஒன்றும் அவரைப் பொறுத்த வரை அத்தனை கஷ்டமான விஷயமல்ல. அவரது சொந்தக்காரப் பையனொருவன் கண்டி வைத்தியசாலையில் கிட்னி சம்பந்தமான நிபுணராக இருக்கிறான். அவனைப் பிடித்தால், கிட்னி தேடிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய பாட்டியைப் பிடித்து விடலாம். ஐந்து லட்சம் என்ன, சில நேரம் கிட்னியின் வகை போன்ற விஷயங்களைப் பொறுத்து அதை விடப் பெரிய விலைக்கு விக்கின்ற வாய்ப்புக்கூட இருக்கின்றது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.  
         
என்றாலும், அவரது மார்க்க உணர்வும், மனசாட்சியும் அதற்கு இடம் தரவில்லை. இளைஞனொருவன் உணர்ச்சி மேலீட்டால் கேட்கிறான் என்று, வெறும் பண நோக்கத்திற்காக அதனை செய்து கொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்? உறுப்பு தானம் செய்வது மிகப் பெரிய தியாகம். நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய செயல்.    

இந்த இளைஞன் இதனை செய்ய நினைப்பது தர்மம் என்று நினைத்தோ, மறுமையில் நன்மையை எதிர்பார்த்தோ அல்ல. அவனது வாழ்க்கைப் பிரச்சினைதான் இதனைச் செய்யத் தூண்டுகிறது. பணம் தருவதாக இருந்தால், தனது கிட்னியை யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பான். இதே இளைஞன் அவனிடம் வசதி, வாய்ப்பு எல்லாம் இருந்து இதனை செய்வானா? நிச்சயாமாக இல்லை. அவ்வாறு இருக்க இவனுக்கு வாழ்வதற்கு வேறு வழி எதையாவது காட்டிக் கொடுப்பதே தனது கடமை. கிட்னியை விற்பதற்கு உதவி புரிவதல்ல என ஸுபைர் காக்கா உறுதியாக நம்பினார்.

'அல்லாஹ் என்ன சோதிக்கிறான். எனக்கு காசி தேவையாக இருக்கும் நேரத்துல, அல்லாஹ் இப்பிடி ஒருத்தன அனுப்பி அல்லாஹ் என்ன சோதிக்கிறான்' ஸுபைர் காக்கா நினைத்தார். தானும் மௌத்தாகுவேன் என்ற ஞாபகம் அவருக்கு ஒரு கணம் வந்தது. எனவே, தனது சொந்தப் பிரச்சினைகள் எப்படிப் போனாலும், தனது கடமையைச் செய்ய முடிவெடுத்தார். 'மகன், எனக்கும் சல்லித் தேவ, பிரச்சின எல்லாம் இருக்குது. மூனு கொமருப் புள்ள ஈக்குது எனக்கு. இந்த புரோக்கர் வேல செஞ்சி சம்பரிக்கிறதுலதான் அதுகள கரயேத்தனும். எனக்கு மட்டுமில்ல. உலகத்துல எல்லாருக்கும் பிரச்சின ஈக்கிது. கிட்னிய விக்கிற அளவுக்கு போக வானம். நான் வேற ஏதாலும் மகனுக்கு செஞ்சி தர முயற்சி செய்றேன்' ஸுபைர் காக்கா இதயத்தால் பேசினார்.

வாழ்க்கைப் பிரச்சினை பயாஸின் இதயத்தைக் கல்லாக்கி வைத்திருந்தது. ஸுபைர் காக்கா சொன்ன 'வேறு' விஷயங்களில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அதற்கு மேல் நிற்கவில்லை. அவன் போய் விட்டான். ஸுபைர் காக்கா பெருமூச்சு விட்டார்.  
xxxx  
சில நாட்கள் கடந்திருக்கும்.

அன்றும் ஸுபைர் காக்கா பீபல்ஸ் பேங்க் வராந்தாவில், கதையளந்து கொண்டே, த்ரீவீல்காரன் ஹயர் வராதா என்று ஏங்கிக் கிடப்பது போல், ஏதாவது பிஸ்னஸ் வராதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
அது ஸுபைர் காக்கா பயாஸை இரண்டாவது தடவையாக சந்திக்கும் சந்தர்ப்பம். அன்று போலவே இன்றும் 'லபக்' என்று கைகளைப் பற்றினான். அன்றிருந்த உறுதி அவனிடம் இன்று இல்லை. 'அன்டக்கி ஏதோ தொழில் ஈக்கிறதா சொன்னீங்களே. கொஞ்சம் பேசிப் பாக்கேலுமா? கொஞ்சம் சொஃப்ட் ஆகச் செய்ற தொழிலாக இருக்கோனும்'.

பயாஸ் மனம் மாறி விட்டான் என்று  ஸுபைர் காக்கா மிகவும் சந்தோஷப்பட்டார். 'மிச்சம் சந்தோஷம் மகன். முன்னால சலீம் நானா, அவர்ட ஸ்டோருக்கு ஒரு ஆளத் தேடிக்கொண்டு ஈக்கிறாரு. பேசித்தரவா?'.

'அதப் ஏற்கனவே பாத்த. அது சரி வராது. சாமனுகள தூக்க வரும். இப்ப பாரமான வேலைகளை செய்ய ஏலா. கிட்னியொன்ட வித்துட்டன். ஜப்பான் போற சான்ஸ் ஒன்டு  வந்தும் கிட்னிய வித்துட்டதால போகல்ல'.

ஸுபைர் காக்கா அதிர்ச்சி அடைந்தார்.

அதைக் கவனிக்காதவன் போல், 'அஞ்சி லட்சத்துக்கு வித்த. இப்ப காணியொன்ட வாங்கிப் போட்டீக்குற'. ஸுபைர் காக்கா ஆடிப் போய் விட்டார். தனது சொந்த மகனுக்கு நேர்ந்த கதியாகவே அவர் இதனைப் பார்த்தார்.
அதற்கு மேல் பேசும் பலமில்லை அவருக்கு. சில விடயங்களைப் பேசி விட்டு அனுப்பி விட்டார். பயாஸின் நிலை அவருக்குள் பெரியதொரு பூகம்பத்தையே தோற்றுவித்திருந்தது. யாருடனும் பேசாமல் பள்ளிவாயலுக்கு நடந்து போனார்.

சமூகத்தின் இரண்டு பக்கமும் அவர் கண் முன் வந்து நின்றது. வசதி படைத்த  பணக்கார வர்க்கம் ஒரு புறம். பாவம், ஏழைகள் என்ன நினைப்பார்கள், கஷ்டப்படுவார்கள் என்ற எந்த வித மனசாட்சியும் இன்றி ஆடம்பரத்தில் மூழ்கி இருக்கிறது. இதனால், ஏனையவர்களும் இதற்கு நிகராக வாழ்க்கை அமைப்பை மாற்றிக்கொள்ள நிர்ப்பந்திக்கபடுகிறார்கள்.

மறுபுறத்தில், வசதியற்ற ஏழைகள் தாம் சமூகத்தின் இரண்டாம் தரப் பிரஜை என்று பிறர் அறிந்து விடக்கூடாது என்று, தமது சக்திக்கு மீறிய விதத்தில் பணக்கார வர்க்கத்தோடு போட்டி போட முனைகிறது. இதன் காரணமாக இவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள இடர்கள் எத்தனை? பயாஸ் போன்றவர்கள் இதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே...! ஸுபைர் காக்கா சிந்தனை செய்தார்.                      

இதற்கு மத்தியில் தன்னை நிம்மதியாக வாழ வைத்த அல்லாஹ்வுக்கு மனதார நன்றி செலுத்தினார். தான் புரோக்கராக இருந்தாலும், தனது தொழில் சமூகத்தில் அந்தஸ்த்தற்ற ஒன்றாக இருந்தாலும், இப்போதுள்ள சீதனப் பிரச்சினை தவிர, பிள்ளைகளுக்கோ, மனவிக்கோ அவர் எதுவைதக் குறையும் வைத்தவரல்லர். தன் பக்கத்து வீட்டு சுலைமான் மிகப் பெரிய பணக்காரனாக இருந்தும், அவனது மகள் கண்டியில் இன்டர்னஷனல் ஸ்கூலில் படித்தும், ஓஎல்லில் பெய்லாக, தனது மூத்த மகள் 'கமே' ஸ்கூலில் படித்திருந்தாலும், ஜீ.ஏ.கியூ வரை படித்திருப்பதை ஒரு பாக்கியமாக நினைத்தார்.

அவரது இதயத்தின் ஆழத்தில் இருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சி வெளிப்பட்டது. அது இறைவனுக்கு கோடி நன்றிகளைக் காணிக்கையாக்கியது.   
Share

0 comments:

Search

About Me

My photo
Kandy, Sri Lanka
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...