அன்று வெயில் கடினமாக இருந்தது. மார்ச் மாதத்து மிகவும் உஷ்னமான வெயில் அது. மைதானமெங்கும் கல்லூரி மாணவர்கள் சிதறிக்கிடந்தார்கள். அவர்கள் அந்த பாடசாலையில், சில நாட்களில் நடைபெற இருக்கும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பயிற்சிக்காகக் கூடியவர்கள்.
மைதானத்தில் இருந்து யூசுப் மிகவும் வாடிய முகத்துடன் வந்து கொண்டிருந்தான். அவனது முகத்தில் மகிழ்ச்சி இல்லை. கவலையும்,வேர்வையும் அவனது முகத்தில் குடி கொண்டிருந்தன. அன்று பயிற்சி நேரத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்புத்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அத்தோடு இன்று அவனது விளையாட்டு அடைவிலும் அவனுக்கு திருப்தியில்லை.
சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் மிகவும் சீரியசானவன் அவன்.இம்முறையும் எப்படியும் சில சாதனைகளை செய்து விட வேண்டும்.வலய மட்டம், மாகாண மட்டம், அகில இலங்கை மட்டம் வரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. யாரிடமும் சொல்லா விட்டாலும், ஒலிம்பிக்கில் கலந்து பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவல் கூட அவனுக்கு இலேசாக இருக்கத்தான் செய்தது.
Share
