ஹஸ்ஸான் ஹாஜியார் வீட்டு நுழைவாயில்.
பஸ்லுர் றஹ்மானின் தொண்டைக் குழி உலர்ந்து விட்டது. மிகவும் சிரமப்பட்டு கால்களை வைத்து நடந்தான். திடீரென்று புவியீர்ப்பு விசை குறைந்து விட்டது மாதிரி உணர்வு அவனுக்கு.
உள்ளே போய் ஹஸ்ஸான் ஹாஜியாரை சந்திப்பதா, வேண்டாமா என்று அவனது மனது பல முறை போராட்டம் நடாத்தியது. ஏதோ ஒரு தயக்கம் அவனைப் பின்னோக்கி இழுத்தாலும், மனைவி, பிள்ளைகள், உம்மா, வாப்பா, திருமண வயதில் இருக்கும் தங்கச்சி அனைவரதும் முகங்கள் அவன் மனக்கண் முன் தோன்றி, அவனை முன் நோக்கித் தள்ளின.
முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஸ்ஸான் ஹாஜியாரின் நவீன ரக மொன்டரோ அவனைப் பயமுறுத்தியது. பைனஸ் மரங்கள் ஆடி, அசைந்து அவனை எள்ளி நகையாடின. அங்கு பூத்துக் குழுங்கிய ரோஜாக்கள் கூட முள்ளாய்க் குத்துவதாய்த் தோன்றியது.
'நான் என்ன பிச்சையா கேட்டு வந்திருக்கிறன்?' பஸூல் தன்னை தைரியப்படுத்திக் கொண்டான்.
நீண்ட நாளாக பஸூல் விற்க முயற்சி செய்யும் காணியை வாங்குவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் ஹஸ்ஸான் ஹாஜியார் விருப்பம் தெரிவித்திருந்தார். விலை மட்டும் பேசி முடிக்கப்பட வேண்டி இருந்தது.
பஸூலைப் பொறுத்த வரை அவனது காணியை விற்பதும், விற்காமல் இருப்பதும் அவனது வாழ்வா, சாவாப் பிரச்சினை.
இதுவரை காலம் செய்து வந்த நடைபாதை வியாபாரம் இப்போது படுத்து விட்டது. நாட்டில் கடுமையாகி வரும் சட்ட திட்டங்கள் அவன் வயிற்றில் கை வைத்து விட்டன. லஞ்சம் கொடுக்க முடிந்தவர்கள், பெரிய புள்ளிகளின் கையாட்கள் இவர்களுக்கே இப்போது பேமன்ட் யாவாரம் செய்ய முடிகிறது. போதாக்குறைக்கு போன தேர்தலில் தெரியாத் தனமாக எதிர்க்கட்சி வேட்பாளன் ஒருவனுக்கு, இறங்கி வேலை செய்து விட்டான். தேர்தல் முடிந்த கையோடு ஆரம்பித்த அரசியல் பலிவாங்கல், அவன் வீட்டு அடுப்பு நெருப்பையே அனைத்து விட்டது.
இதற்கு மேலும் பேமன்ட் பிஸ்னஸ் சரிவராது. நிரந்தரமாக ஒரு இடத்தை கூலிக்கு எடுத்து, வியாபரம் செய்தால்தான் உண்டு. ஆனால், அடுத்த பிரச்சினை மூலதனம்.
பஸூலிற்கு உம்மாவிடம் இருந்து வாரிசுச் சொத்தாகக் கிடைத்த பத்து பேச்சஸ் காணி சந்தைக்கு வந்த கதை இதுதான்.
காணியின் நான்கு புறத்திலும் இருந்த வேலிக் கம்பங்களுக்கு திடீரென்று கால் முளைத்து நடக்கவும் ஆரம்பித்து விட்டதால், பத்து பேச்சர்ஸ் எட்டு பேச்சஸாகச் சுருங்கி விட்டது.
இந்தக் காணியை விற்பது சம்பந்தமாகத்தான் ஹஸ்ஸான் ஹாஜியாரைச் சந்திக்க வந்திருக்கிறான். ஹஸ்ஸான் ஹாஜியார் லேசிப்பட்ட ஆளில்லை. கொழும்பு, கண்டி, மாத்தளை, அக்குறணை, கட்டுகஸ்த்தோட்டை, மடவளை, கலகெதரை, உக்குவளை, கல்ஹின்னை என எல்லா இடத்திலும் அவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள். அவரது சொத்துக்கள் இல்லாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த எட்டுப் பேச்சஸை வாங்குவது அவருக்கு ஒரு செய்தியே இல்லை.
ஊர் ஜும்ஆப் பள்ளி வாயலின் கட்டுமாண வேலைகளுக்காக ஐம்பது லட்சம் ரூபாய்களை அநாயாசமாக அள்ளி வீசியவர் ஹஸ்ஸான் ஹாஜியார். போதுமான அளவில் வசூல் கிடைக்கவில்லை என்றால், தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தியாவது பள்ளியின் கட்டுமாண வேலைகளை முடிப்பதாகச் சூளுறைத்தவர். அப்படிப் பட்ட ஒரு நல்ல மனிதர் தனது காணியை வாங்கப் போகிறார் என்று நினைத்த போது பஸூலின் உடம்பெல்லாம் புல்லரித்தது.
****
ஹஸ்ஸான் ஹாஜியாரின் வீட்டு அழைப்பு மணி ஒலிக்கிறது. அழைப்பு மணி ஒலிப்பதற்கும், கதவு திறப்பதற்கும் இடைப்பட்ட சில நிமிடங்கள் யுகமாய்த் தெரிந்தது பஸூலிற்கு.
கதவு திறக்கிறது, புன்னகை பூத்த முகத்தோடு ஹஸ்ஸான் ஹாஜியார் நிற்கிறார். அவரது கூரிய பார்வையும், பழுத்த தாடியும் அவர் மீது ஒரு மதிப்பச்சத்தைத் தோற்றுவித்தன.
'யாரு? ஸைத் லெப்பட மகனா?' வாய் நிறைந்த புன்னகையோடு ஹஸ்ஸான் ஹாஜியார் வரவேற்றார். முஸாஹபா செய்தார். முஆனகா செய்தார். பஸூலின் குடும்பத்தோடு அவருக்கிருந்த பழைய தொப்புள்க் கொடி உறவுகளை ஞாபகப்படுத்தினார். 'முந்தி போற வார எல்லாம்தான். எல்லாரும் புள்ளகள், பேரப்புள்ளகள் ஆகினதுக்குப் பொறவுதான் போக்குவரத்துகள் கொறஞ்சி போச்சு'.
அந்த நவீன ஆடம்பர வீட்டின் சொகுசுகள் பஸூலின் கால்களைக் கூசச் செய்தன.
பஸூலின் தங்கச்சியின் திருமண விஷயத்தைப் பற்றியும் ஹஸ்ஸான் ஹாஜியார் விசாரித்தார். 'அல்லாஹ்ட நாட்டம் வார நேரம் எல்லாம் சரியா வரும். நாங்க என்ன மனக்கெட்டாலும், அல்லாஹ் முந்தியே எழுதி வச்சுத்தானே ஈக்குறான்'.
ஹஸ்ஸான் ஹாஜியாரின் வசீகரிக்கும் பேச்சு பஸூலின் மனதுக்கு இதமாக இருந்தது. அது அவனது மன அழுத்தத்தைச் சிறிது குறைத்ததும் அல்லாமல், அவனது மனதில் நம்பிக்கை ரேகைகளையும் தோற்றுவித்தன.
பஸூலின் இதயம் துடிக்க மறக்கும் கடைசிக் கட்டம்.
'ஒங்கட காணியப் போய்ப் பார்த்தேன். வேலி இல்ல என்னா?'
'அல்பீசியா வேலி இருக்குது ஹாஜியார்'
'மெயின் ரோட்ல இருந்து மிச்சம் தூரத்துலதான் இருக்குது என்னா?'
'உள் ஏரியா என்டா, அந்த எடம் வர ரோட் போவுது. இப்ப நெறய வீடுகளும் கட்டிப்படுது, பெறுமதியான எடம்தான்'.
'பெறுமதியான மரம் தடிகள் ஒன்டும் தோடத்துல இல்லயே?'
'................................'
'கரண்ட், தண்ணி ஒன்டும் போவுது இல்ல|'
'இல்ல ஹாஜியார் இப்ப நெறய வீடுகள் கட்டிப்பட்டு கரன்ட், தண்ணி, டெலிபோன் எல்லா வசதியும் இருக்குது'
'ஒங்கட காணிய சுத்தி இருக்குற ஆக்கள் என்டா நல்ல ஆக்கள் இல்ல. காணிய எடுத்துப் போட்டா, எனக்குக் கஸ்டம்தான்'.
'....................................................................'
'அடுத்தது எங்கட மகன் லண்டன்ல. மூத்த மகள் சுவீஸ்ல. அடுத்த மகள் அமெரிக்கால. அவங்க இங்க வந்து இந்தக் காணிய அனுபவிக்கப் போறதில்ல. நீங்க கேட்டதால முஹப்பத்துக்காக ஒரு ஒதவியாத்தான் காணிய வாங்குவோம் என்டு யோசிச்ச'.
தனது காணிக்கு விலை பேசப் போன வியாபாரி என்ற நிலையில் இருந்து, ஹாஜியாரின் உதவியை எதிர்பார்க்கும் பிச்சைக்காரனொருவனின் நிலைக்குத் தான் மானசீகமாகக் கீழிறங்கிச் செல்வதாக உணர்ந்தான் பஸூல்.
'சரி. காணிக்கு விலயயும் பேசி முடிச்சுடுவோம். ஒங்கட கடைசி விலயச் சொல்லுங்களே' என்றார் ஹஸ்ஸான் ஹாஜியார் தொண்டையைக் கனைத்துக் கொண்டே. தொப்பியைக் கழற்றி மேசை மீது வைத்தார். அவரது தட்டைத் தலையில் நட்சத்திரங்கள் மின்னின. 'அந்த எடத்துல பேர்ச்சஸ் ஒன்னர லட்சம் போவுது ஹாஜியார்'
ஒரு ஓரச் சிரிப்பை உதிர்த்தார். அந்தக் கேலிச் சிரிப்பின் உஷ்ணத்தில் பஸூலின் இதயமே பற்றியெறிவதாகத் தோன்றியது. அப்படி ஒரு வலி...
'அந்த எடத்துல அவ்ளோ போகாதே!'
'இல்ல ஹாஜியார், போன மாசமும் அந்த எடத்துல ஒன்றறக்கி ஒரு காணிய வித்திருக்குறாங்க'
'அது யாராலும் விஷயம் தெரியாதவனுக்கு ஏமாத்தி வித்தீப்பானுகள். நான் போன... போன கெழம டவ்ன் பள்ளியோட பக்கத்துல ஒரு காணி வாங்கின ஒரு லச்சத்தி எழுபத்தையாயிரத்துக்கு. யாரு? வட விக்குற சத்தார் நானாட காணி. அந்த இடம் எப்பிடி கொலிடி எடம்' ஹஸ்ஸான் ஹாஜியாரின் பேச்சின் சப்தம் தற்போது உயர்ந்திருந்தது. அவரது முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த புன்னகை மறைந்து, இப்போது கடுமை பரவியிருந்தது.
தான் சொன்ன விலை நியாயமானது என்று பஸூலிற்கு நிச்சயமாகத் தெரியும். ஹஸ்ஸான் ஹாஜியாரின் வாதத்திற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாத பஸூல் தடுமாறிப் போனான். அவரது நோக்கமும் அவனுக்குத் தெளிவாக விளங்கியது.
'நான் ஒரு எழுபது, எழுபத்தையாயிரம் மாதிக் கேக்கத்தான் யோசிச்ச. அந்த இடத்துக்கு அதுதான் பெறுமதி'
பஸூலின் உலகம் சுழன்றது. மனைவி, பிள்ளைகள், உம்மா, வாப்பா, திருமண வயதில் இருக்கும் தங்கச்சி எல்லோரும் அவன் மனக்கண் முன் வந்து போனார்கள். ஓடிக் களைத்த முயல் தானாக தன் காலடியில் வந்து விழப்போகிறது, அதை ஏன் விரட்ட வேண்டும் என்ற நினைப்பில் அவர் சிறிதும் அசைந்து கொடுக்க மாட்டார் என்பது பஸூலுக்கு நன்றாகவே புரிந்தது.
'நான் கொஞ்சம் வீட்லயும் மஷூறா பண்ணிட்டு ஒரு முடிவ சொல்றேனே' பஸூல் வெளியேறினான்.
'நல்லா மஷூறா பண்ணி சொல்லுங்க வாப்பா. அல்லாஹ்ட நாட்டம் யாருக்கு இருக்குதோ அவங்களுக்குத்தானே கெடக்கிம்' ஹஸ்ஸான் ஹாஜியார் பஸூலை வழியனுப்பி வைத்தார். பள்ளிவாயல் அமைக்க ஐம்பது லட்சம் கொடுத்தது அல்லாஹ்வின் பட்டோலையில் வரும் என்பது போலவே, இந்த எட்டு பேர்ச்சஸ் காணி விஷயமும் அல்லாஹ்வின் பட்டோளையில் வரும் என்பது ஹஸ்ஸான் ஹாஜியாருக்குத் தெரிந்திருந்ததோ என்னவோ?

Share

0 comments:
Post a Comment